மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நடப்பாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என்று பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் இன்று விதி எண்.110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:

”ஒரு மாநிலத்தின் உயிர் நாடியாக விளங்குவது கிராமங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஊராட்சிகளில் வாழும் மக்கள் நலன் கருதி நகரங்களில் கிடைக்கப் பெறும் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை கிராமங்களிலும் ஏற்படுத்துதல், ஊரக சாலைகளை மேம்படுத்துதல், வீட்டு வசதியினை அளித்தல், தூய்மையான சுற்றுப்புறம் மற்றும் சுகாதாரத்தைப் பேணுதல், ஊரக மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மறைந்த முதல்வர் ஜெயலலிதா எடுத்து வந்தார்.

மேலும், 2011-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், முதல்வரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தை ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்றது.

நடப்பாண்டில் ஊரகப் பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

1. 2015-16 ஆம் ஆண்டில், பல்வேறு வகையான சாலைகளை ஒரே திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கடந்த 2 வருடங்களில், 8,875 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் 1,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், 2017-18-ஆம் ஆண்டில், 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 3,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும்.

2. பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மத்திய அரசு, இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, 2017-18 ஆம் ஆண்டில் 2,659 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மற்றும் 25 உயர்மட்டப் பாலங்கள் 1,254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

3. ஊரகப் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்புகளை வலுப்படுத்திடவும், உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும், பயிற்சிகள் அளிப்பதற்கும், தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை கண்காட்சி நடத்தி விற்பனை செய்வதற்கும் ஏதுவாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிடங்கள் தலா 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1000 கட்டிடங்கள் 600 கோடி ரூபாயில் கட்டப்படும்.

4. திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற முழு சுகாதார தமிழகம் என்ற இலக்கினை அடையும் வகையில், 2017-18 ஆம் ஆண்டில், தூய்மை பாரதம் இயக்கம் மற்றும் தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 26.49 லட்சம் தனி நபர் இல்லக் கழிப்பறைகள், தலா 12,000 ரூபாய் ஊக்கத் தொகையில் மொத்தம் 3,178 கோடி ரூபாயில் கட்டப்படும்.

5. திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வெற்றிகரமாக செயல்படுவதை மேம்படுத்தும் வகையிலும், கழிவுகள் அகற்றப்படும் முறைகளை நவீனப்படுத்தும் விதமாகவும், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அருகாமையில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கும், மலைப் பிரதேசங்களில் அமைந்துள்ள கிராம ஊராட்சிகளுக்கும், அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய கிராம ஊராட்சிகளுக்கும் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளாக, தெருவில் வைக்கப்படும் குப்பைத் தொட்டிகள் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மூன்று சக்கர மிதிவண்டிகள் / தள்ளு வண்டிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் மின்கலம் மூலம் இயக்கப்படும் தள்ளு வண்டிகள் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் வழங்கப்படும். மொத்தத்தில், இத்திட்டத்திற்கென 500 கோடி ரூபாய் செலவிடப்படும்.

6. சுய உதவிக் குழுக்களுக்கு தேவையான கடன் உதவியை உரிய நேரத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகள் மூலம் பெற்றுத் தருவதன் வாயிலாக பெண்கள் பொருளாதார மேம்பாடு அடையவும் மற்றும் கடன் சுமைகளிலிருந்து விடுபடவும் வழிவகை செய்யப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கென கடந்த 6 ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 32,848 கோடி ரூபாய் வங்கிகள் மூலம் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

Comments

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here